search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமிதி திருவிழா"

    • 1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் 46 -ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள் வாக்கு தேவி சித்தர் தவத்திரு. ஆர்.ராஜா சுவாமிகள் தலைமையில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 1008 கிலோ குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் செங்குன்றம், பாடிய நல்லூர், புழல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து குங்குமம் மற்றும் பிரசாதங்களை பெற்று சென்றனர்.

    ஆலய தர்மகர்த்தா ஆர். ராஜா சுவாமிகள் கூறுகையில், பராசக்தி வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அஷ்ட காளி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கணபதி ஓமம் மற்றும் கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக மங்கள சண்டிஹோமமும், அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். பால்குடம் எடுத்தல், பெண்கள் முளைப்பாரி சிரசில் ஏந்திய வண்ணம் ஆலமரம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடையும்.

    அதனைத் தொடர்ந்து அம்பாள் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அடியார்கள் தோல் சுமந்து அம்பாள் மாடவீதி பவனி வருதல், அம்பாளுக்கு பூச்சோரல் விழா, அக்னி கப்பறை கரத்தில் ஏந்திய வண்ணம் வீதி உலா, அம்பாளுக்கு தூப தீப ஆராதனைகளும் நடைபெறும்.

    அம்பாள் தனது அடியார்களுடன் தீ மிதித்தல் என்னும் பூக்குண்டத்தில் திருநடனம் புரிதல், மஞ்சள் நீராட்டு விழா, சுமங்கலி பூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஆகையால் பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்து அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    திருக்கடையூர்:

    திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு.
    • சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம்.

    ஆலயத் தோற்றம்

    நம் பாரதத்தில் மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு. அப்படி ஒரு ஆலயம்தான், சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம். திரவுபதியுடன் பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த நேரத்தில், உபமன்யு முனிவரிடம் ஆசி பெறுவதற்காக தில்லை வனத்திற்கு வந்தனர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அப்படி அவர்கள் வந்து தங்கியிருந்த இடத்தில்தான், தற்போது திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு காலச் சூழல்களில் சிதிலமடைந்ததன் காரணமாக, சமீப காலங்களில் புதியதாக கட்டப்பட்டிருக்கிறது.

     இந்த ஆலயம் பல காலமாக சிதிலமடைந்து கிடந்ததால், அதில் இருந்த அம்மனை மட்டும் ஒரு இடத்தில் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். ஒரு முறை திரவுபதியை வணங்கும் ஒரு பெண்ணிற்கு, கிணற்றில் குதித்து நீராடுவது போல் கனவு வந்துள்ளது.

    கனவில் கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்த பக்தையை, கரையில் நின்ற ஒரு பெண் பார்த்து, "நீ தினமும் நீராடுகிறாய்.. நான் எவ்வளவு நாளைக்கு தான் நீராடாமல் இருப்பது?" என்று கேட்டு புன்னகைத்தாளாம். அதற்கு அந்த பக்தை, "யாரம்மா நீ?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் "இந்த இடத்தின் சொந்தக்காரி" என்று கூறி மறைந்துவிட்டாளாம்.

    தான் கண்ட கனவை மறுநாள் காலையில் வீட்டாரிடமும், ஊர்க்காரர்களிடமும் அம்மனை வழிபடும் பெண் கூறியிருக்கிறார். மேலும், "என் கனவில் வந்தது வேறு யாருமல்ல. இங்கே சிதைந்து கிடக்கும் ஆலயத்தில் இருந்தபடி நம்மை எல்லாம் காத்து ரட்சிக்கும் திரவுபதி அம்மன்தான்" என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அந்த ஊர் மக்கள் சார்பில், சிதைந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டும் பணி தொடங்கப்பட்டது. திரவுபதி அம்மனின் அருளால் ஆலயம் கட்டும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சிறு ஆலயமாக கட்டி முடித்து குடமுழுக்கும் செய்தனர்.

    அதன்பிறகு ஆலயம் மீண்டும் சிதலமடைந்து சுமார் 50 ஆண்டு காலமாக அப்படியே இருந்தது. இதையடுத்து மீண்டும் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து ஆலயத்தை திருப்பணி செய்து புதுப்பித்தனர். இந்தப் பணி 1988-ம் ஆண்டு தொடங்கி, 1989-ம் ஆண்டு முடிந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் ஆலயம் முன் மண்டபம் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     ஆலய அமைப்பு

    ஆலய முகப்பில் இருப்பது சுப மண்டபம். அதனுள் நுழைந்தால், கருடாழ்வார், கொடிமரம், பலிபீடம், நந்தி, காவல் தெய்வமான முத்தால் வழிவகுத்தார், விநாயகர், பாலமுருகன், அரவான், உள்ளடியார், அய்யனார் சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. கருவறையில் திரவுபதி அம்மன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இரு திருக்கரங்களோடு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோஷ்டத்தில் சன்னிதிகள் இல்லை.

    திருமணத் தடை உள்ளவர்கள், தொடர்ந்து 9 வாரம் வெள்ளிக்கிழமைகளில் பூசணிக்காய், அன்னாசிபழம் ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், அர்த்த மண்டபத்தில் அம்மனுக்கு நேராக தலை வாழை இலை போட்டு, அதில் அட்சதை நிரப்பி, அதன் மேல் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்காகவும் இங்கே வழிபாடு செய்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இந்த ஆலயத்தின் சுப மண்டபத்தில் வைத்து வளைகாப்பு செய்து கொள்கிறார்கள். அப்போது திரவுபதி அம்மனிடம் இருந்து பெறப்பட்ட வளையலையே, முதல் வளையலாக கருவுற்ற பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள்.

     இவ்வாலயத்தில் வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் பெருந்தீமிதித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தவிர கார்த்திகை தீப விழா, ஆடி கடைசி வெள்ளியில் திருவிளக்கு பூஜை, மாத பவுர்ணமி பூஜை ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வீரராகவன் தெரு வழியாக சென்றால் ½ கிலோமீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம்.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
    • வீரபத்திர சாமிக்கு தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள போசிநாயக்கன அள்ளியில் ஆடி 18-யை முன்னிட்டு முத்துமாரியம்மன், துர்க்கை, வைஷ்ணவி, மகேஸ்வரி அம்மனுக்கு 11-ம் ஆண்டு தீமிதி விழா நடைபெற்றது.

    இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    காலை வீரபத்திர சாமிக்கு தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்துமாரியம்மன், மாரியம்மன் சாமிக்கு திருவீதிபவனி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தீமிதி விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  

    • காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இத்திருகோவிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி வெள்ளிக்கிழமை கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்றிலிருந்து நாள்தோறும் பல்வேறு வகையான பூஜைகள்,கரகம் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, கூழ் ஊற்றும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.நேற்று மாலை ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள முனுசாமி தாத்தா கோவில் அருகே காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், பூக்களாலும்,மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது.இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இதன் பின்னர், மங்கள வாத்தியம் இசைக்க பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆத்துப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.
    • இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் மேலதாலங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு தீபாதனை நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அக்னி அபிஷேகம் நடைபெற்றது.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏக தின அன்னை தமிழ் அர்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன் பகாசுரன் வழிபாடு, கொடியேற்றம், பொங்கல் வைத்தல், 36 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவுக்கு சிகரம் வைத்தாற் போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமி ஊர்வலம் அதிகாலை 5 மணிக்கு பீமன் பகாசூரன் சந்நிதி அருகே குண்டம் இறங்கும் இடத்தை வந்தடைந்தது.

    குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி கையில் வேலெடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து. மல்லிகை மலர்ச்செண்டு, எலுமிச்சை கனியை குண்டத்தில் வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

    தொடர்ந்து உதவி பூசாரிகள் மணிகண்டன் கோலமுடி, சேகர் சக்தி கரகம், ரமேஷ் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். பின்னர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கினர். காலை 6 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மதியம் 12 மணிக்கு அக்னி அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தமிழ் புலவர் மு.சவுந்தரராஜன் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாணிக்கவேல் துரைசாமி, தேக்கம்பட்டி ஊராட்சி தலைவி நித்யா நந்தகுமார் மற்றும் துரை நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உட்பட 3 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 550-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் எலுமிச்சை மற்றும் பூக்கட்டுகளை குண்டத்தில் உருட்டி விட்டு அதன் பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், செயல் அலுவலரும், திருக்கோவில் உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.க்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 12 இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம், பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் வசதிக்காக கோவை, மேட்டுப்பா ளையம், அன்னூர் போன்ற இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு நடக்கிறது.
    • நாளை காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், ஏகதின அன்னைத்தமிழ் லட்சார்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன், பகாசூரன் வழிபாடு ஆகியன நடைபெற்றது.

    இந்த நிலையில் 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து யாகம் வளர்த்தல், காலை 7 மணிக்கு தேக்கம்பட்டி தேசிய கவுடர் கிராம மக்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகளை செய்திருந்தார்.

    தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தேக்கம்பட்டி ஊர் கவுடர் திருநாவுக்கரசு தலைமையில் வரதராஜ் முன்னிலையில் சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் சிம்ம வாகன கொடி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். அம்மன் சன்னதியில் சிம்ம வாகன கொடிக்கு சிறப்பு பூஜை செய்த பிறகு கொடி மரம் முன்பு எடுத்துவரப்பட்டது.

    அங்கு சிறப்பு பூஜைக்கு பிறகு கொடி மரத்தில் நாதஸ்வர இசை, மேள-தாளம் முழங்க கொடி ஏற்றபட்டது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.

    • 7-ந்தேதி கங்கையம்மன் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.
    • 8-ந்தேதி கூழ்வார்த்தல் பலி பூஜை, அம்மனுக்கு கும்பம் நடக்கிறது.

    சென்னை கொளத்தூர் புத்தகரம் அங்காளம்மன், கங்கையம்மன், நாகாத்தம்மன் மற்றும் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி கங்கையம்மன் ஆடி 3-ம் வாரம் தீ மிதி திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந்தேதி மாலை 7 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்கிறது.

    இதையொட்டி வருகிற 31-ந்தேதி மாலை 6 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 1, 2-ந்தேதிகளில் காலை மகா யாகம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆரத்தியும், மாலை பரிவார தேவதைகளுக்கு பரிவார ஹோமமும் நடக்கிறது.

    4-ந்தேதி காலை தாய் வீட்டு சீர், பூங்கரகம் ஊர்வலம், மாலை குமார மக்கள் சந்திப்பு, 5-ந்தேதி காலை விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு 108 பால்குடம் எடுத்து வந்து அபிசேகம், மாலை அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வர்ணிப்பு, வாணவேடிக்கை போன்றவை நடக்கின்றன. 6-ந்தேதி காலையில் பூங்கரகம் ஊர்வலம், மாலை அக்னி மூட்டு நிகழ்வு, இரவு பூங்கரகம், தீ மிதித்தல் நடைபெறுகிறது.

    7-ந்தேதி மாலை கங்கையம்மன் உற்சவர் திருவீதி உலா, 8-ந்தேதி கூழ்வார்த்தல் பலி பூஜை, அம்மனுக்கு கும்பம், தெருக்கூத்து உள்ளிட்டவை நடக்கின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    ×